Ticker

6/recent/ticker-posts

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார்

பிரபல இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர்  எம்.எஸ்.விஸ்வநாதன் [M.S. Viswanathan] இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 4.15 மணிக்கு உயிரிழந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள்.

இந்நிலையில் இன்று அதிகாலை  4:15 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவருடைய உயிர் பிரிந்தது. சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன் கேரளாவின் பாலக்காடு அருகே எலப்புள்ளி கிராமத்தில் 1928 ஜூன் 24ல் பிறந்தார். அவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன். அவரது பெற்றோர் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி.

4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.

சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.

எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவருக்கு மெல்லிசை மன்னன் பட்டம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சூட்டப்பட்டது.

மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். 

எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி சடங்கு நாளை (புதன்கிழமை) காலை நடைபெற உள்ளது. 

காலத்தால் அழிக்க முடியாதா பல அற்புதமான பாடல்களை தமிழர்களக்கு வயங்கிய மெல்லிசை மன்னர் எம்எஸ்வி யின் புகழ் தமிழ் உள்ளவரை வாழும் 

Post a Comment

0 Comments