Ticker

6/recent/ticker-posts

எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம்

பிரபல தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் நேற்று இரவு மரணம் அடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரக பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். 

எழுத்தாளர் ஜெயகாந்தனின் மறைவு தமிழ் இலக்கிய உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மரணம் என்பதும் வாழ்வின் ஒரு பகுதி. அதனை ஏற்றுக் கொள்ள பழக வேண்டுமே தவிர, அதனை ரசிக்கக்கூடாது. மரணத்துக்காக அழுவதும் மரணத்தை ரசிப்பதுதான் என்றார் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தனை படித்து ரசித்தவர்களுக்கு அவரது மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது. அது ஈடு செய்ய முடியாத இழப்பு.

1934 ஆம் ஆண்டு கடலூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமல் 5 ஆம் வகுப்புடன் தனது பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டார். பின்னர், விழுப்புரத்திலுள்ள தனது மாமா வீட்டில் வளர்ந்த அவர், பின்னர் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
சென்னையில் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்த அவர், 1949 ஆம் ஆண்டு தஞ்சையில் காலணி கடையில் வேலை பார்த்தார். அப்போது, காமராஜரின் தீவிர தொண்டராக மாறி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
சமூக நலனில் அக்கறையும், இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடும் கொண்ட ஜெயகாந்தன் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'உன்னைப் போல் ஒருவன்', 'ஊருக்கு நூறு பேர்', 'வாழ்க்கை அழைக்கிறது', 'கைவிலங்கு', உள்ளிட்ட 60 நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ அவரது சிறந்த நாவல்களில் ஒன்றாகும். இந்த நாவலும், ‘உன்னைப்போல் ஒருவன்’ நாவலும் திரைப்படமாக வெளிவந்தன. இதில், ‘உன்னைப்போல் ஒருவன்’ சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான ஜனாதிபதி விருதை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பத்ம பூஷண் விருது, சாகித்ய அகாடமி விருதையும் அவர் பெற்றுள்ளார்.
எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு தலைவர்களின் புகழஞ்சலி

கருணாநிதி
தமிழ் இலக்கிய உலகத்தில் ஜே.கே என்று அன்பொழுக அழைக்கப்பட்ட - எழுத்துலகச் சிற்பி, அருமை நண்பர் ஜெயகாந்தன் மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியுற்றேன். துயரம் தனித்து வருவதில்லை என்பது எவ்வளவு உண்மை.

நேற்றிரவு இசைமுரசு நாகூர் அனீபா மறைந்த செய்தியைத் தொடர்ந்து ஜெயகாந்தனின் மறைவுச் செய்தி கிடைத்தது.

தொடக்கத்தில் திராவிட இயக்கத்தின்மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு காலப் போக்கில் மாறியது; அவருடைய அணுகுமுறையும் மாறிற்று.

என்மீது பாசத்தைப் பொழியத் தொடங்கினார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் இசபெல்லா மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியினை அறிந்து, என் மனைவி ராஜாத்தியும், என் மகள் கனிமொழியும் அவரை நேரில் சென்று பார்த்து விட்டுவந்து என்னிடம் கூறியதும், அப்போது முதலமைச்சராக இருந்த நான் உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கச் செய்து, சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தேன்.

உடல்நலம் அப்போது தேர்ச்சியடைந்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிய போது கூட, தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மா. ராஜேந்திரனிடம், "நான் வீட்டிற்குச் செல்லும்முன் கலைஞரைப் பார்த்து நன்றி கூறி விட்டுத்தான் செல்வேன்" என்று பிடிவாதமாகக் கூறி, நேரில் என்னை வந்து சந்தித்து, "என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்" என்ற ஜெயகாந்தனின் சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன.

மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான ஞான பீட விருது, பத்ம பூஷண் விருது, சாகித்ய அகாடமி விருது, முரசொலி அறக்கட்டளை சார்பில் இலக்கியத்திற்கான விருது என பல விருதுகளைப் பெற்றவர்.

பெருந்தலைவர் காமராசருடன் நெருங்கிப் பழகியவர். என்னிடம் மாறாத அன்பு கொண்டவர். பல நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து கலந்து கொண்டவர். இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துகள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில்நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை.


 வைரமுத்து

ஜெயகாந்தன் என்பது ஒற்றைச்சொல்லில் ஒரு சரித்திரம். அது இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம். ஞானபீடம் என்பது அவர் பெற்ற விருதல்ல; அவர் எழுத்துக்களே ஞானபீடம்தான்.

சூரிய வெளிச்சம்கூட எட்டிப் பார்த்திராத வாழ்க்கையை தன் கலைக்கண்களால் பார்த்துப் பதிவு செய்தவர்; விளிம்புநிலை மனிதர்களை உலக இலக்கியக் கதாபாத்திரங்களாய் உலவச் செய்தவர் ஜெயகாந்தன்.

சமரசம் செய்து கொள்ளாததே அவரது வாழ்வின் கிரீடம் என்று நான் கருதுகிறேன். அதனால் அவர் வாழநினைத்த சத்தியத்தின் வெளியிலேயே அவரது வாழ்வு கழிந்தது.

எழுத்தாளனுக்கென்று வார்க்கப்பட்ட ஒரு தொங்கிப்போன உருவத்தை அவர் துடைத்தழித்தார்; கம்பீரமே அவரது உருவமாயிற்று.

பாரதி எழுத வந்த பிறகு கவிதைக்கு மீசை முளைத்தது போல ஜெயகாந்தன் எழுத வந்த பிறகு உரைநடைக்கு மீசை முளைத்தது.

அரசியலால் இலக்கியத்தையும், இலக்கியத்தால் அரசியலையும் செழுமைப்படுத்த முயன்றவர். 60களிலேயே தமிழுக்கு ஒரு மாற்றுத்திரைப்படத்தை முன்வைத்தவர்.

இலக்கியத்தின் எல்லா வடிவங்களுக்கும் பங்களிப்புச் செய்திருக்கிறார். பல எழுத்தாளர்களின் முதல் எழுத்துக்கு உந்துசக்தி தந்திருக்கிறார். புதுமைப்பித்தன் விட்டுப்போன இடத்தை ஜெயகாந்தன் இட்டு நிரப்பினார். அழியாத பல சிறுகதைகளையும் சில நாவல்களையும் படைத்திருக்கிறார்.

அழியும் உடல் கொண்டுதான் மனிதன் அழியாத காரியங்களை ஆற்றிப் போகிறான். அவரது பௌதிக உடல் மறையும்; படைப்புகள் மறைவதில்லை.

ஜெயகாந்தன் புகழை உயர்த்திப் பிடிக்கும் கூட்டத்தின் முன்வரிசையில் நானுமிருப்பேன்.

ஜெயகாந்தன் படைப்பே நீ வாழ்க.

மரணம் அடைந்த ஜெயகாந்தனுக்கு காதம்பரி, தீபலட்சுமி என்ற இரு மகள்களும், ஜெயசிம்மன் என்ற மகனும் உள்ளனர். அவரது உடல் கே.கே நகரிலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Source : http://tamil.webdunia.com 


Want to write a unique article ?
Click here to start automatically spinning your articles by using the latest Spin Rewriter 5.0 Technology.
 


Post a Comment

0 Comments