Ticker

6/recent/ticker-posts

புட்டம்ராஜு கண்டிகா - சச்சின் தத்து கிராமம்



கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தத்து எடுத்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிராமம் புட்டம்ராஜு கண்டிகா, சிங்கப்பூர் போல காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.

மத்திய அரசின் ஒவ்வொரு எம்.பிக்களும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதனை மேம்படுத்த வேண்டும் என்ற திட்டப்படி எம்.பியான சச்சின் டெண்டுல்கரும் ஆந்திர மாநிலம்  நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த  புட்டம்ராஜு கண்டிகா  கிராமத்தை தத்தெடுத்தார். சாலை வசதி, மருத்துவ வசதி, மின்சார வசதி என்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு நோயாளி கிராமம் போல காட்சியளித்த புட்டம்ராஜு கண்டிகாவை அழகிய முன்மாதிரி கிராமமாக மாற்ற சச்சின் கனவு கண்டார்

அதன்படி, இந்த கிராமத்தில் கான்கிரீட் சாலைகள், சுற்றிலும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டு அமைக்கப்பட்டது. பாதாள சாக்கடைத் திட்டம், 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிக்கு பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதோடு கிராமத்தினர் உடல் நலனை கருத்தில் கொண்டு கிராமத்தில் குட்டி மருத்துவமனை, குழந்தைகள் கல்வி கற்க பள்ளிகூடம், விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபம் உள்ளிட்டவை சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர கிராமம் முழுவதும் பசுமையாக்க மரக்கன்றுகள் நடப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.


கிராமத்தை மேம்படுத்தும் பணிக்காக சச்சின் தனது எம்.பி.நிதியில் இருந்து 2.75 கோடியும் மத்திய அரசு 3 கோடியும் வழங்கியது.அதேபோல் அடிக்கடி பணிகளை பார்வையிட்டு தேவைப்பட்ட மாற்றங்களையும் சச்சின் செய்து வந்தார்.அழுக்கடைந்த கிராமத்தை குட்டி சிங்கப்பூர் போல மாற்றிய சச்சின் இது குறித்து கூறுகையில், பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு பாருங்கள்..நான் திட்டமிட்டதை விட அற்புதமான கிராமமாக மாறியிருக்கும் என்றார்.

சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் 110 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தின் மக்கள் தொகை 400தான். பெரும்பாலும் எஸ்.சி, எஸ்.டி வகுப்பினரே இங்கு வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் ராவ் என்பவர் கூறுகையில், இங்கு சாலைவசதி, சாக்கடை வசதி என்று எதுவுமே இல்லாமல் இருந்தது. தற்போதுஅனைத்து வசதிகளும் கொண்ட நகரம் போல எங்கள் கிராமம் மாறியிருக்கிறது என்றார் மகிழ்ச்சி பொங்க.

சச்சின் கிரிக்கெட்டுக்கு கடவுளே இல்லையோ இந்த கிராமத்தை சேர்ந்த 400 பேருக்கும் நிச்சயம் கடவுள்தான்...!

நன்றி : அனந்த விகடன் 

Post a Comment

0 Comments