சென்னை மாநகரம் [Chennai City 375] இன்று தனது 375 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. ஆகஸ்ட்
22, 1639 ம் ஆண்டு சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டதாக கூறபடுகிறது . 2004-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22-ந் தேதியிலிருந்து சென்னை தினம்
கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையின் 375- ஆம் ஆண்டை முன்னிட்டு பிராட்வே காசி தெருவில் சென்னையில்
உள்ள முக்கிய இடங்களின் பழைய புகைப்படங்களை பொது மக்களின் பார்வைக்காக
வைத்து சென்ட்ரல் ரயில் நிலையத்தின் வடிவில் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
இந்திய
தொல்பொருள் ஆராய்ச்சி துறை சார்பில் கோட்டை வளாகத்தில் சென்னையின் பழமை
வாய்ந்த புகைப்பட கண்காட்சி நடந்தது
இன்று 375 வது பிறந்த நாள் காணும் சென்னை மாநகருக்கு நடிகர்
கமல் ஹாஸன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாஸன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒரு கடற்கரை கிராமமாக தொடங்கி, கிழக்கிந்திய கம்பெனி, போர்த்துகீசியர்,
டச்சு, பிரெஞ்சு போன்ற பலர் படையெடுத்து வெல்ல முயன்று கடைசியில்
ஆங்கிலேயர் தக்க வைத்துக்கொண்ட ஒரு அழகான தீவு.
இரண்டாற்றின் கரை என்று ஸ்ரீரங்கத்தை சொல்வார்கள். சென்னையும் இரண்டாற்றின்
கரைதான். அதற்கு இன்று 375 வயதாகி இருக்கிறது.
இந்த இளம் தாயை, இரு நதி
கொண்ட இரண்டாற்றின் கரையாகிய இந்த ஊரை, இரண்டு சாக்கடைகள் கொண்ட நகரமாக
மாற்றிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு.
இதை மாற்றும் திறமையும் நமக்கு உண்டு. அதை செய்தால் சரித்திரத்தில் நாம்
இரண்டு நதிகளை சுத்திகரித்து புதுப்பித்த வித்தகர்களாக போற்றப்படுவோம்.
இல்லையேல் நாம் வாழ்ந்த இக்காலத்தின் சரித்திரம் நல்ல இரு நதிகளை
சாக்கடையாக மாற்றிய ஜனக்கூட்டத்தின் சரித்திரமாக எழுதப்படும்.
அதை நினைவில் கொண்டு பெற்றதை கொண்டாடுவோம், கற்றதை போற்றுவோம். பிறந்த நாள்
வாழ்த்துக்கள் எனது சென்னைக்கு!
-இவ்வாறு கமல் ஹாஸன் கூறியுள்ளார்.
இன்று 375 வது பிறந்த நாள் காணும் சென்னையின் சில சுவையான முதல்கள் இங்கே :
* இந்தியாவிலேயே நகர எல்லைக்குள் தேசிய பூங்கா இருக்கும் ஒரே ஊர் சென்னை தான். கிண்டி தேசிய பூங்கா தான் அந்த பூங்கா
*இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஆங்கிலேயே ரெஜிமென்ட் சென்னையில்
எழுந்தது தான். இப்பொழுது இருக்கும் ராணுவத்தின் ரெஜிமென்ட்களில் மூத்த
ரெஜிமென்ட் மெட்ராஸ் ரெஜிமன்ட் தான்.
* இந்தியாவின் முதல் ரேடியோ சேவை சென்னையில் எழுந்தது தான். பிரசிடன்சி
ரேடியோ க்ளப் என்கிற கிருஷ்ணஸ்வாமி செட்டியால் துவங்கப்பட்ட இந்த ரேடியோ
சர்வீஸ் துவங்கிய ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான் அரசே ரேடியோ சேவையை
துவங்கியது. இந்த வருடத்தோடு அந்த ரேடியோ சேவை ஆரம்பித்து தொன்னூறு
வருடங்கள் ஆகின்றன.
* இந்தியாவின் முதல் வங்கி ஆளுனர் க்ரிபோர்ட் அவர்களால் 1682 இல் துவங்கப்பட்ட மெட்ராஸ் வங்கி தான்.
* ஆசியாவின் முதல் கண் மருத்துவமனை எழுந்ததும் சென்னையில் தான். Madras Eye Infirmary என்று பெயர்கொண்ட அது உருவான வருடம் 1819 !
* இந்தியாவின் முதல் நோக்ககம் எழுந்ததும் சென்னையில் தான்.
நுங்கம்பாக்கத்தில் இருநூற்றி இருபது ஆண்டுகளுக்கு முன் எழுந்தது அது.
இந்தியாவின் முதல் திரிகோண அளவையியல் நடைபெற்றது பரங்கி மலையில் !
* இந்தியாவிலேயே முதன் முதலில் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்தது மெட்ராஸ் மாநகராட்சி தான்.
* இந்தியாவிலேயே கோயில் நிலங்களை நிர்வகிக்கும் அறநிலையத்துறை உருவானதும்
விடுதலைக்கு முந்திய நீதி கட்சியின் ஆட்சி காலத்தில் தான்.
*
இந்தியாவின் மிக பழமையான பொறியியல் கல்விக்கூடம் கிண்டி பொறியியல் கல்லூரி
தான். இந்தியாவில் மெக்கானிகல்,எலெக்ட்ரிகல் ஆகிய துறைகளில் பொறியியல்
பாடத்தை முதன் முதலில் ஆரம்பித்தது இங்கே தான்.
* இந்தியாவின் முதல்
கார்பரேசன் சென்னை கார்பரேசன் தான். உலகின் இரண்டாவது பழமையான கார்பரேசன்
அது தான். இது எழ காரணம் ரிப்பன். அவர் பெயரால் எழுந்தது தான் ரிப்பன்
கட்டிடம்.
நன்றி : ஆனந்த விகடன்
0 Comments
Comment is awaiting for approval